|
| |
|
| மர உலா (Tree Walk) |
 |
 |
| |
|
| |
|
|
|
ExNoRa International & Association of Teachers
with
Pachaiyappan ExNoRa
An Oxygen Factory made as a Lethal Chamber
“Preserve Pachaippan Reserve”
“பச்சையப்பனைப் பாதுகாப்போம்
பசுமையைப் பாதுகாப்போம்”
|
|
சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி
"மரண தண்டனை சரியா? தவறா? அப்படி மரண தண்டனை தருவது என்றால் தூக்கிலிடலாமா? விஷ ஊசி போடலாமா?" என்று பேசி பொழுதைக் கழித்துக் கொண்டு இருப்பவர்கள் பலர். மிக எளிதாக மரண தண்டனையை நிறைவேற்ற வழி ஒன்று இருக்கிறது. குற்றவாளியின் கை, கால்களைக் கட்டிப் பூந்தமல்லி நெஞ்சாலையில் 'ரோஜாவின் ராஜா ஜவஹர்லால் நேரு' பெயரில் அமைந்திருக்கும் பூங்காவிற்கு எதிரே காலை 6.00 மணிக்கு வைத்துவிட வேண்டும். மாலை 6.00 மணிக்கு இறந்தவர் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றுவிடலாம். காரணம் சென்னை மாநகரிலே காற்று மாசு, புகை மாசு, தூசி மாசு அதிகமுள்ள பகுதி கீழ்பாக்கம், சேத்துப்பட்டு இடையே உள்ள பகுதிதான் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கூறுகிறது.
இதற்கான காரணங்கள்:
- வெள்ளைக்காரன் நிழல் தருவதற்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நட்ட பயனுள்ள பல பிரம்மாண்டமான உயர்ந்த மரங்களைச் சாலையை அகலப்படுத்துகிறோம் என்று கூறி வெட்டித் தள்ளிவிட்டார்கள்.
- சென்னையில் மிக முக்கியப் பழமையான பூங்காக்களான நேரு பூங்கா, தமிழறிஞர் திரு.வி.க. பெயரில் ஷெனாய் நகரில் அமைந்துள்ள பூங்கா ஆகிய இந்த இரண்டு பூங்காக்களில் இருந்த மரங்கள் அனைத்தும் மெட்ரோ ரயில் என்ற பெயரில் வெட்டிச் சாய்க்கப்பட்டுவிட்டன. மொட்டையடிக்கப்பட்டுவிட்டன. (அதிர்ச்சி தரும் செய்தி சென்ற ஆண்டுதான் மாநகராட்சி இந்த இரண்டு பூங்காக்களின் மேம்பாட்டிற்கு ரூபாய் 15 கோடி செலவிட்டது).
வேடிக்கை என்னவென்றால் பூங்காக்களை அழித்து உலகமெங்கும் இரயில் நிலையங்கள் உருவாக்குவது இல்லை. உலகத்தின் மிகப்பெரிய பூங்காவான லண்டன் ஹைட்பார்க் எனப்படும் பூங்காவில் மூன்று இரயில் நிலையங்கள் இருக்கின்றன. எங்கே? பாதாளத்தில்! பூங்காவும், இரயில் நிலையமும் ஒன்றையன்று அழிக்காமல் இரண்டுமே வாழ்கின்றன. மக்களுக்கு சேவை செய்கின்றன. எந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் சுற்றுச்சூழல் கெடாவண்ணம்தான் வெளிநாடுகளில் திட்டங்களைத் தீட்டுகின்றனர்.
- பிராணவாயு தொழிற்சாலை (Oxygen Factory)
பாலைவனப் பசுமைச் சோலை என்று ஒரு இடம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. இது இந்த நெடுஞ்சாலையின் நுரையீரல் பகுதி (Lung Space). இது ஒரு சமுகக்காடு கூட (Social Forest). இதுதான் பச்சைப் பசேல் என்று பசுமையுடன் காட்சி தரும் பச்சையப்பன் கல்லூரி வளாகம்.
இக்கல்லூரி வளாகத்தில் அறிஞர்களாலும், ஆசிரியர்களாலும் நடப்பட்டு வளர்க்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இவற்றில் பல மரங்கள் நூறு வயதைத் தாண்டிவிட்டன.
- கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர், அமைந்தக்கரை, ஷெனாய் நகர், ஹாரிங்டன் வாழ் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு.
இந்த மரங்கள் 50 டன் ஆக்ஸிஜனை நாள்தோறும் உற்பத்தி செய்து இங்கு வாழும் மக்களின் உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இந்த மரங்களுக்கு இப்பொழுது வந்துவிட்டது தூக்குக் கயிறு. இந்த மரங்கள் விரைவில் வெட்டப்படும். எதற்காக? இரயில் நிலையம் அமைக்கத்தான். இதனால் உண்டாகப் போகும் விளைவு என்னவென்றால் கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தக்கரை, ஷெனாய் நகர், ஹாரிங்டன் சாலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் தாழும். நோய்கள் அதிகரிக்கும். குறிப்பாக நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகப் போகும் காற்று மாசால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். இரத்தப் புற்று நோய் போன்ற கொடிய வியாதிகள் வரும்.
- பழமையையும், பாராம்பரித்தையும் போற்றுபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி (for Heritage Champions)
பழமை வாய்ந்த பச்சையப்பன் கல்லூரி கட்டிடங்கள் ஹெரிடேஜ் அங்கீகாரம் பெற்றவை. இதைத் தொன்மைச் சின்னமாக மாநிலத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரும், வரலாற்று அறிஞர்களும் பச்சையப்பனை பழம்பெரும் தொன்மை சின்னமாக அறிவித்துள்ளனர். சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இதை அங்கீகாரம் செய்துள்ளது.
- பச்சையப்பன் மாணவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள்
மாபெரும் அறக்கொடையாளர் பச்சையப்ப முதலியார் அறம் (Trust), பவுனி நாராயணசாமிபிள்ளை அவர்களால் பாதுகாக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் கொடையை வழங்கி உலகத்திற்கே வழிக்காட்டக் கூடிய அறநிலையம். சென்னை பல்கலைக்கழகத்தின் தாய் எனப் போற்றப்படும் பச்சையப்பன் கல்லூரி 1842-ல் ஏழை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டு இன்று வரை ஏழை எளிய மக்களின் சொர்க்க வாசலாகத் திகழும் கல்வி ஆலயமே பச்சையப்பன் கல்லூரி. பச்சையப்பர் அறநிலையம் தந்த அறக்கொடைகள் ஏராளம். அதில் ஒன்று இக்கல்லூரி.
மற்ற கல்வி நிலையங்கள் முறையே,
1. செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி 2. கொ. கந்தசாமி நாயுடு கல்லூரி, அண்ணாநகர் 3. பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, காஞ்சிபுரம் 4. பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, காஞ்சிபுரம் 5. கொ. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர் மற்றும் பல பள்ளிகள்.
கறவை மாடு
துரதிஷ்டவசமாக ஒரு சில அரசியல்வாதிகள் பச்சையப்பன் அறக்கட்டளையில் நுழைந்து கல்வி சேவை செய்கிறேன் என்று கூறி வள்ளல் பச்சையப்பர் அளித்த நன்கொடைச் சொத்தில் பெரும் பகுதியை சுரண்டி எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்களுக்கு பணம் கறக்கும் கறவை மாடு பச்சையப்பன் கல்லூரி சொத்துகள் தான்.
இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள பச்சையப்பன் கல்லூரி. சரித்திர நாயகர்களை உருவாக்கிய கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி இந்தியாவின் இரண்டாவது பழைய கல்லூரி. இதைத் தொடங்கி 169 ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபை சபாநாயகர்கள், துணை வேந்தர்கள், I A S , I P S அதிகாரிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறையினர், விளையாட்டு வீரர்கள் போன்ற இந்த நாட்டுக்கு மிகச்சிறந்த மனிதர்களை வளர்த்து அளித்த கல்வி நிறுவனம் பச்சையப்பன் கல்லூரி. முதன்முதல் ஒரு இந்தியரை கல்லூரி முதல்வராக 1914-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்கு முன்பே நியமித்தது இக்கல்லூரியின் மற்றும் ஒரு சிறப்பு.
மாநில முதல்வர்களை உருவாக்கிய கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணா அவர்களும், முன்னாள் ஆந்திர முதல்வர் மாண்புமிகு பிரும்மானந்த ரெட்டியும் படித்த கல்லூரி இது. மேலும் தென்னிந்தியாவின் நான்கு முதல்வர்களை உருவாக்கிய கல்லூரி இது.
ஒரு சர்வகலாசாலை
பச்சையப்பன் கல்லூரியில் 12 கல்வித்துறைகள் உள்ளன. முதுகலைப் பட்டம் பெறவும், ஆராய்ச்சி செய்யவும் வசதிகள் உள்ளன. இளங்கலை (Degree), முதுகலை (P G Degree), இள ஆய்வு (M.Phil), ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) இங்கு உள்ளன. இங்கு மாலைக் கல்லூரியும் இருக்கிறது. இந்த மாலைக் கல்லூரியில் படித்து தலைச்சிறந்து விளங்கியவர்கள் பலர்.
மரத்தை கரையான்கள் அரிப்பது போன்று வேகமாக மறைந்து வரும் கல்லூரி நிலம். நமக்காக மரம் நட்டவர்கள் நம் மூதாதையர்கள்.வெட்டுபவர்கள் தற்பொழுது வாழ்பவர்கள்
இந்த கல்லூரி நிலத்திற்கு எப்படியெல்லாம் தாக்குதல் வந்தது அல்லது கல்லூரி எப்படி தன்னை இழந்து வந்தது என்பதெல்லாம் பரிதாபமான சோக வரலாறாகும். கல்லூரியின் வடக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையை அகலப்படுத்த கணிசமான நிலம் பறிக்கப்பட்டது. மேற்கே ஹாரிங்டன் சாலை விரிவுப்படுத்தவும் பச்சையப்பன் நிலம் பறிபோனது. தெற்கே இரயில்வே இலாக்கா (பீச் - தாம்பரம் மார்க்கம்) இன்னொரு புதிய இரயில் பாதையை அமைக்க ஒரு முறையும், சுரங்கப்பாதை வேண்டி கணிசமான பச்சையப்பன் நிலத்தை மற்றொரு முறையும் அரசு கையகப்படுத்தியது. ஆக, கல்லூரியின் நான்கு திசைகளில் நான்கு முறை பச்சையப்பன் கல்லூரி நிலம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. வெறும் இடம் மட்டும் பறிபோவது இல்லை. அந்த இடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன.
நான்கு அடுக்கு கல்வி நிலையத்தின் நான்கு பக்கமும் நிலம் பறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் நான்கு அடுக்குக் கல்வி நிலைகள் பற்றி முன்பே குறிப்பிட்டோம். இந்தக் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நான்கு அடுக்கு உயர்கல்வி நிறுவனம் என்றால் குறைந்தபட்சம் அரசின் விதிப்படி 50 ஏக்காராவது நிலம் இருக்க வேண்டும். ஆனால் அரசே இருக்கும் இடத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறது. இப்பொழுது இருப்பது 30 ஏக்கர் நிலம் மட்டுமே. தெற்கே தென்னிந்திய இரயில்வே எடுத்துக் கொண்டது. வடக்கே மெட்ரோ இரயில் நிர்வாகம் 300 மரங்களை வெட்டி 3.2 ஏக்கரா நிலத்தை கைப்பற்ற ஆயுத்தமாகிவிட்டது. அதற்காக இந்த நிலத்தினை மெட்ரோ இரயில் நிலையம் அமைப்பதற்கு கல்லூரி கல்வி இயக்குனரால் உடனடியாக நிரந்திரமாக 3.2 ஏக்கர் பச்சையப்பன் நிலத்தினை வழங்கும்படி ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு ஏற்படப் போகும் பாதிப்பு
இப்படி 3.2 ஏக்கர் நிலம் எடுத்துக் கொள்ளப்பட்டால்
- பல பட்டப்படிப்புகளை கல்லூரி இழக்க நேரிடும்
- பல ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்
- கல்லூரியின் மிக அருகாமையில் இரயில் நிலையம் அமைந்தால் அது மாணவர்களின் கல்விக்கு குந்தகம் விளைவிக்கும்
- அது மட்டுமல்ல பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே பிரச்சினைகளையும் அது உருவாக்கும்
- மொத்தத்தில் இக்கல்லூரியின் உயர்கல்வியின் சூழல் முற்றிலும் பாதிக்கப்படும்
- இந்த மரங்கள் நம் மூதாதையர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் நட்டவையாகும். அவர்கள் நினைவாக திகழ்கின்றன. இச்செயல் அவர்களை அவமதிக்கும் செயலாகும்
- சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் பகுதிவாழ் மக்கள் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செய்வது இங்குதான். இவர்கள் இனி இங்கு நடைபெயர்ச்சி செய்ய முடியாது. வருத்தமான விஷயம் அருகாமையில் உள்ள நேரு பூங்காவும், திரு.வி.க பூங்காவும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதால் அங்கு நடப்பவர்கள் பச்சையப்பன் கல்லூரிக்குள்தான் நடக்க வருகிறார்கள்
- இக்கல்லூரியில் படிக்கும் குடிசைவாழ் மாணவர்கள் தங்கள் பாடங்களை படிப்பது இந்த மரத்தடியின் கீழ்தான். இவ்வாய்ப்பினை இவர்கள் இழந்துவிடுவார்கள்
- இரயில் பாதை இங்கே செல்வதில் தடை ஏதும் இல்லை. ஆனால் ரயில் நிலையம் அமைப்பதுதான் எதிர்க்க வேண்டிய ஒன்று, தடுக்கப்பட வேண்டிய ஒன்று
|
| இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரியின் கிழக்கே 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் கீழ்பாக்கத்திலும், மேற்கே 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் ஷெனாய் நகர் பூங்காவிலும் இரயில் நிலையம் அமைக்கும் வேலை தொடங்கிவிட்டன. அருகருகே இத்தனை இரயில் நிலையங்கள் வேண்டுமா? அருகாமையில் இருக்கும் இரண்டு இரயில் நிலையங்களுக்கு இடையிலே ஒரு கல்லூரியை அழித்து இரயில் நிலையம் உருவாக்கத் தேவையில்லை என்பது யதார்த்தம். |
|
உலகத்தை மேலும் வெப்பமயமாக்காதீர்கள். குளிர்வியுங்கள்
நாம் இப்பொழுது வாழ்வது உலகம் வெப்பமயமாகிவிட்ட காலம் (We have entered the Age of Global Warming). உலகமெங்கும் ஏதாவது ஒரு சாக்கு வைத்து மரங்கள் வெட்டப்படுகின்றன. நகர்ப்புற வளர்ச்சியை சாக்காக வைத்து காடுகள் அழிக்கப்படுகின்றன. இப்பொழுது பச்சையப்பன் பசுங்காட்டினை, சமூகக் காட்டினை, மக்கள் காட்டினை, மரங்கள் காட்டினை அழிக்கக் கோடாலிகள் தயராகிவிட்டன. ஆசிரியர்கள் அடிக்கடி மாணவர்களுக்கு கூறும் அறிவுரை, "மரம் நடுங்கள்" என்பதே. இப்படி ஒரு சமூகக் காட்டினை அழித்தால் மாணவர்களுக்கு எத்தகையச் சிந்தனை உண்டாகும். "மரம் நடுவது தேவையில்லாத ஒன்று" என்ற எதிர்மறை எண்ணம் வராதா? இந்த மரங்களின் படுகொலையைத் தடுக்க வேண்டாமா? பசுமையைப் பாதுகாக்க வேண்டாமா? பச்சையப்பன் மாணவர்கள் படிப்புக்கு உண்டாகி இருக்கும் பெரும் சோதனையைத் தடுக்க வேண்டாமா? இதோ புறப்பட்டுவிட்டது "பச்சையப்பனைப் பாதுகாப்போம், பசுமையைப் பாதுகாப்போம்" என்ற சுற்றுச்சூழல் பேரியக்கம். இதில் உலகமெங்கும் கீழ்கண்டவர்கள் சேரலாம்.
தற்போதைய பச்சையப்பர்கள்
- பச்சையப்பன் ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள், சிப்பந்திகள்
முன்னாள் பச்சையப்பர்கள்
- பச்சையப்பன் பழைய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பழைய அதிகாரிகள், பழைய சிப்பந்திகள்
பச்சையப்பன் பிரபலங்கள்
- பச்சையப்பன் கல்லூரியில் படித்து இன்று அரசியல், வியாபாரம், அரசாங்கம், கலைத்துறை, கல்வித்துறை, விளையாட்டுத் துறை, எழுத்துத் துறை போன்ற துறைகளில் இருக்கும் பிரபலங்கள் "பச்சையப்பனைப் பாதுகாப்போம் பசுமையைப் பாதுகாப்போம்" என்ற இயக்கத்தின் முன்னணித் தலைவராக சேவை செய்ய முன் வர வேண்டும்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
- உலகத்தின் அனைத்து நாடுகளில் வாழும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பொதுப் பிரச்சினையாக எண்ணி இதில் பங்கேற்க வேண்டும்
மேற்கு சென்னைவாசிகள்
- கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப்பட்டு, அமைந்தக்கரை, ஷெனாய் நகர், அண்ணாநகர் வாசிகள் அனைவரும் இதில் சேர வேண்டும். இப்பகுதியில் அடைந்துவரும் காற்று மாசால் பாதிக்கப்படுவது அங்கு வாழும் மக்களின் உடல்நலமே. தெருவிற்கு ஒரு பிரதிநிதி இக்குழுவில் இடம் பெற வேண்டும்
ஏழை, எளியவர்கள்
- ஏழை, எளிய மக்கள் இப்போராட்டத்தில் சேர வேண்டும். ஏனென்றால் அவர்கள் பிள்ளைகளுக்கு புகலிடம் தருவது இக்கல்லூரிதான்
தமிழ்மொழி ஆதரவாளர்கள்
- தமிழ் அறிஞர்கள், மொழிப்பற்றாளர்கள், தமிழை சுவாசிப்பவர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் "பச்சையப்பன் கல்லூரி படிகட்டும் தமிழ் பாடும்" என தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன்னை அர்பணித்தக் கல்லூரி. தமிழ் பச்சையப்பனை வளர்த்தது. பச்சையப்பன் தமிழை வளர்த்தது
அரசியல்வாதிகள்
- கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் இடம் பெற வேண்டும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மறந்துவிடாதீர்கள். நாட்டின் சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்கியது பச்சையப்பன் கல்லூரிதான். அரசியல் தலைவர்களை தயாரிக்கும் கல்லூரி இது
இப்போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர், சுற்றுச்சூழல் வல்லுனர், முனைவர் M.B. நிர்மல் அவர்கள். ( mbnirmal@gmail.com, 98400 34900) மற்றும் பச்சையப்பன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் திரு.வா.மு.சே. ஆண்டவர் ( sethuandu@gmail.com, 94444 51750)
ExNoRa International & Association of University Teachers with PACHAIYAPPAN ExNoRa
“பச்சையப்பனைப் பாதுகாப்போம் பசுமையைப் பாதுகாப்போம்”
நடைபெற இருக்கும் போராட்டங்கள்
- விருக்க்ஷ ரக்க்ஷ பந்தன் - செப்டம்பர் 12-ம் தேதி, திங்கட்கிழமை மதியம் 2.00 மணிக்கு
பெண்கள் தங்கள் உடன் பிறப்புகளுக்கு ராக்கிக் கயிறு கட்டுவார்கள். தங்கள் பந்தத்தை இதன் மூலம் வெளிப்படுத்துவதோடு அல்லாமல், சகோதரரின் பாதுகாப்பையும் பெறுவார்கள். அதைப் போலவே பச்சையப்பன் கல்லூரியில் மரங்களைத் தங்கள் உடன்பிறப்புகளாகக் கருதி ஆசிரியர்களும், மாணவர்களும் நூறு வயதான 300 மரங்களுக்கு காப்புக் கயிறு (ராக்கி கயிறு) கட்டுவார்கள். மரங்களின் பாதுகாப்பு உணர்வையும், மரத்தினால் மனித குலம் பாதுகாக்கப்படும் புனிதத்தையும் எடுத்துக்காட்டுவதாக இந்நிகழ்வு அமையும்.
- மர உலா (Tree Walk) - செப்டம்பர் 28-ம் தேதி, 2011, காலை 11.30 மணிக்கு
இங்குதான் எத்தனை வகை மரங்கள். எத்தகைய பயன்களை அவை தருகின்றன. இந்த மரங்களை வைத்தே இவைகளைக் காட்டியே இன்றும் பாடம் எடுக்கிறார்கள் பச்சையப்பன் தாவரவியல் மற்றும் இதர துறை ஆசிரியர்கள். சென்னையின் அனைத்துக் கல்லூரி தாவரவியல் ஆசிரியர்களும் இங்கு "மர உலா" நிகழ்த்துவார்கள். இந்த மர உலா நிகழ்த்தும் போது அனைத்துக் கல்லூரி தாவரவியல் வல்லுனர்கள் இங்குள்ள ஒவ்வொரு மரத்தைப் பற்றியும், அம்மரம் ஆற்றும் சேவையைப் பற்றியும் எடுத்துக் கூறி, மரம் எவ்வாறெல்லாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது என்பதை விளக்கிக் கூறுவார்கள்.
- மரம் தழுவும் நிகழ்ச்சி (CHIPKO)
அந்த காலத்திலே ராஜஸ்தானில் ஒரு அரசன் காடுகளை அழிக்க முற்பட்டான். மரங்களை உயிருக்கு உயிராக நேசித்த ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அம்மன்னனின் ஆட்கள் மரத்தை வெட்ட வந்த பொழுது, ஆதிவாசிகள் மரத்தைக் கட்டித் தழுவி, 'முதலில் எங்களை வெட்டி விட்டு பிறகு மரத்தை வெட்டுங்கள்' என்றார்கள். அந்த கொடுங்கோல் அரசனும், அவர்கள் கழுத்தை சீவி, பின்பு மரத்தை சீவினான்.
பச்சையப்பன் மரங்களை வெட்ட கோடாலிகள் வரும் பொழுது பச்சையப்பர்கள் மரங்களைக் கட்டித் தழுவுவார்கள். மரத்திற்கு இராஜஸ்தான் ஆதிவாசிகள் போல் பாதுகாப்பு அளிப்பார்கள். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 21-ம் தேதி அன்று நடைபெறும். மாணவர்களும், ஆசிரியர்களும் மரங்களைக் கட்டித் தழுவி, "மரங்களே எங்களுக்குப் பாதுகாப்புத் தந்து வந்த உங்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தருவோம்" என்று வாக்குறுதி அளிப்பார்கள்.
- புயல் வேகத்தில் புது காட்டினை உருவாக்கும் நிகழ்ச்சி
விளையாட்டு மைதானங்கள் நீங்கலாக பச்சையப்பன் வளாகத்தில் எங்கெல்லாம் மரம் நட முடியுமோ, எவ்வளவு மரம் நட முடியுமோ அவ்வளவு மரங்களை ஒரே நாளில் பச்சையப்பன் மாணவர்கள் பச்சையப்பன் வளாகம் முழுவதும் மரம் நடுவார்கள். ஆக்கப்பூர்வமான செயல்கள் மூலம் அழிவு செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
- பச்சைப்பன் வரலாறு கண்காட்சி
பச்சையப்பனின் 169-வது ஆண்டு சரித்திரத்தை ஓவியங்களாகவும், படங்களாகவும், எழுத்துக்களாகவும் கொண்ட கண்காட்சி மாணவர்களால் நிகழ்த்தப்படும். இந்த கண்காட்சி பச்சையப்பன் சுற்றுச்சுவருக்கு மேல் வைக்கப்படும். நடைபாதையில் நடந்தவாறே மக்கள் பச்சையப்பன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளலாம். பரவசம் அடையாளம்.
- "சென்னை மனித சங்கிலி"
சென்னையை இணைக்கும் பிரம்மாண்ட மனித சங்கிலி
சென்னை நகரில் இருக்கும் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளை இணைக்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பார்கள். ஆனால் இன்றோ நம் மூதாதையர்கள் விட்டு சென்று கல்வி நிலையங்களே எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. பிள்ளையார் கோவில் ஆண்டி ஆக்கப்பட்டுள்ளது பச்சையப்பன் கல்லூரி.
'இளைஞர் சக்தி', 'மாணவர் சக்தி' மற்றும் 'ஆசிரியர் சக்தி' இயக்கங்கள் அனைத்துக் கல்வி நிலையங்களையும் மனித சங்கிலியால் இணைக்கும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவர்கள் கல்வி நிலையங்களுக்கு வெளியே கரங்கோர்த்து நின்றால் போதும். ஒரு கல்லூரிக்கோ, பள்ளிக்கோ பிரச்சினை என்றால் மற்ற கல்வி நிலையங்கள் இனி துணை நிற்க வேண்டும் (One for all, all for one).
மாணவர்களே, பழைய மாணவர்களே, ஆசிரியர்களே, முன்னாள் ஆசிரியர்களே வாருங்கள், சேருங்கள் நம்மை வளர்த்த கல்லூரியை நாம் பாதுகாப்போம்.
தொடர்பு கொள்க:
ஒருங்கிணைப்பாளர், பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர், சுற்றுச்சூழல் வல்லுனர்,
முனைவர் M.B நிர்மல் அவர்கள் (Email ID: mbnirmal@gmail.com, 98400 34900).
பச்சையப்பன் கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் (AUT) தலைவர்
முனைவர் திரு.வா.மு.சே. ஆண்டவர்.
(Email ID: sethuandu@gmail.com, 94444 51750) |
| |
|
|
|
|
|
|